January 13, 2026 – தினமணி செய்தித்தாள் - சிறு துணுக்கள்
1. இந்தியா-ஜெர்மனி
இடையே பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த
19 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
(i) குஜராத் மாநிலம்,
அகமதாபாதில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாட்டுப் பிரதமர்கள் பங்கேற்ற
கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக, இந்தியர்கள்
ஜெர்மனி வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும்போது விசா இல்லாத பயண அனுமதி வழங்கப்படும்
என்ற முக்கிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
(ii) ஜெர்மனி பிரதமர்
ஃப்ரீட்ரிக் மெர்ஸ் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார். ஆசிய நாடுகளுக்கு
அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.
(iii) வர்த்தகம்,
பொருளாதாரம்:
இருதரப்பு வர்த்தகம்
5,000 கோடி டாலரைக் கடந்து சாதனை படைத்துள்ளதையும், இந்தியாவில் 2,000-க்கும் மேற்பட்ட
ஜெர்மனி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பொருளாதார
வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், கூட்டுப் பிரகடனம் ஒன்றும் கையொப்பமானது.
மேலும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கான
உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
(iv) பசுமை எரிசக்தி,
தொழில்நுட்பம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கான சிறப்பு மையம் ஒன்றை இரு நாடுகளும்
இணைந்து தொடங்கியுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தியில்
ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி மற்றும்
அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா-ஜெர்மனி கூட்டுறவு எதிர்காலத்தை நோக்கியது
என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
(v) வேலைவாய்ப்பு,
திறன் மேம்பாடு: வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, குடியேற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும்
இந்தச் சந்திப்பில் முக்கிய இடம் பிடித்தன. ஜெர்மனியில் தகவல் தொழில் நுட்பம், பொறியியல்
துறைகளில் நிலவும் தேவையை ஈடுசெய்யும் வகையில், திறன்மிகு இந்தியப் பணியாளர்கள் மற்றும்
சுகாதாரத் துறை நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகளை எளிதாக்க புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
(vi) மேலும், இந்தியா-ஜெர்மனி
இடையே கையொப்பமாகியுள்ள உயர் கல்விக்கான விரிவான செயல்பாட்டுத் திட்டம், இரு நாட்டு
கல்வித் துறையில் ஒரு புதிய திசையை உருவாக்கும். ஜெர்மனியின் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள்
இந்தியாவில் தங்களின் வளாகங்களைத் தொடங்கி, இந்திய மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை
வழங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
(vii) கலாசாரம்,
பிற விவகாரங்கள்:
குஜராத்தில் அமையவுள்ள
தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை ஜெர்மனி கடல் சார் அருங்காட்சியகத்துடன் இணைந்து
மேம்படுத்தும் ஒப்பந்தம் கையொப்பமானது.
(viii) வளர்ந்துவரும்
நாடுகளுக்கு உதவும் வகையில் கானா, கேமரூன், மலாவி ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளில்
இந்தியா- ஜெர்மனி முத்தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பின்கீழ் புதிய திட்டங்கள் அறிவிக்
கப்பட்டுள்ளன.
(ix) இந்தச் சந்திப்பின்
நினைவாக, அகமதாபாதில் ஜெர்மனியின் துணைத் தூதரகமும் திறக்கப்படவுள்ளது.
(x) மேலும், இந்தியா-ஜெர்மனி
இடையே செமிகண்டக்டர் துறையில் கூட்டுறவு, அரியவகை கனிமங்கள், விளையாட்டு மற்றும் அஞ்சல்
சேவைகளில் ஒத்துழைப்பு, தொலைத்தொடர்பு, உயிரிப் பொருளாதாரத்தில் ஆராய்ச்சி மற்றும்
மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்த கூட்டுப்பிரகடனமும் கையொப்பமானது.
2. கிரீன்லாந்தின்
பாதுகாப்பும் தற்காப்பும் நேட்டோ கூட்டணிக்கே சொந்தம் என்று அந்தப் பிராந்திய பிரதமர்
ஜென்ஸ்-பிரெடரிக் நீல்சன் தெளிவுபடுத்தியுள்ளார்.
(i) இது குறித்து
தனது ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியதாவது: கிரீன்லாந்து டென்மார்க் தேசத்தின் பகுதி
மற்றும் நேட்டோ கூட்டணியின் ஒரு அங்கம். அதனால் எங்கள் பாதுகாப்பும் தற்காப்பும் நேட்டோவுக்கே
சொந்தம். இது அடிப்படை மற்றும் உறுதியான நிலைப்பாடு
(ii) கிரீன்லாந்தை
அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அந்த நாட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கிரீன்லாந்து ரஷியா அல்லது சீனாவின் கைகளுக்குச்
சென்றால் அது அமெரிக்காவுக்கு ஆபத்து என்று அவர் கூறுகிறார். ராணுவ நடவடிக்கை மூலம்
கிரீன்லாந்தைக் கைப்பற்றும் திட்டமும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், கிரீன்லாந்து
பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
3. மியான்மரில் ரோஹிங்கியா
முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு
அரசுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
விசாரணை தொடங்கியது. இது குறித்து நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
(i) ரோஹிங்கயாக்கள்
இன அழிப்பு செய்யப்படுவதாக காம்பியா சார்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின்
விசாரணை தொடங்கியுள்ளது.
(ii) ரோஹிங்கியா
மக்களுக்கு எதிராக 2017-இல் மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதல்களை இன அழிப்பாக அறிவிக்க
வேண்டும் என்று அந்த வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மியான்மர் தரப்பு மறுத்து வருகிறது.
'அது பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கை என்று மியான்மர் அரசு வாதிடுகிறது.
(iii) இந்த வழக்கில்,
ஐ.நா.வின் முன்னாள் செயலர் பான்கிமூன் தலைமையிலான சர்வதேச ஆலோசனைக் குழு 2017-இல் வெளியிட்ட
அறிக்கை முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. அந்த அறிக்கையில், மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா
மக்களுக்கு எதிரான 'இன அழிப்பு' நோக்கத்துடன் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
(iv) அந்த நடவடிக்கையின்
போது சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் மியான்மரில் இருந்து தப்பி
வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். அவர்கள் மீதான தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பீடு தெரிவிக்கிறது.
(v) இந்த வழக்கு
2019-இல் தொடங்கப்பட்டு, 2022-இல் சர்வதேச நீதிமன்றம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான
வன்முறையைத் தடுக்கவும், ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டது.
(vi) இந்த விசாரணை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதன் இறுதி தீர்ப்புக்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. அகமதாபாதில் தேசிய
ஒலிம்பிக் அகாதெமி மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அதன் தலைவராக இந்திய ஒலிம்பிக் சங்க
(ஐஓசி) தலைவர் பி.டி.உஷா நியமிக்கப்பட்டதாகவும் ஐஓசி அறிவித்தது.
5. விஜேடி' முறை
- சர்வதேச கிரிக்கெட்டில் மழையால் பாதிக்கப்படும்
ஆட்டங்களுக்கான வெற்றி இலக்கு 'டிஎல்எஸ்' (டக்வொர்த் லீவிஸ்) முறையில் கணக்கிடப்படுவது
போல, உள்நாட்டு கிரிக்கெட்டில் மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களுக்கான இலக்கு 'விஜேடி'
(வி.ஜெயதேவன்) முறையில் கணக்கிடப்படுகிறது. கேரளத்தைச் சேர்ந்த பொறியியலாளரான வி.ஜெயதேவன்.
இந்த கணக்கீட்டு முறையை வழங்கியுள்ளார்.
6. சர்வதேச காற்றாடித்
திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
(i) சாபர்மதி நதிக்கரையில்
சர்வதேச காற்றாடித் திருவிழா நடைபெற்றது.
(ii) ஆண்டுதோறும்
மகரசங்கராந்தி விழாவையொட்டி சர்வதேச காற்றாடித் திருவிழா குஜராத்தில் நடத்தப்படுகிறது.
நிகழாண்டு ஜன.14- ஆம் தேதி வரை இந்த விழா நடத்தப்படவுள்ளது.
(iii) கடந்த ஆண்டு
இந்த விழாவைக் கண்டுகளிக்க 3.83 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
7. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீரில் அமைந்த ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா
கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது; அங்கு மேற்கொண்ட
உள்கட்டமைப்புப் பணிகள் சட்டபூர்வமானவை என்று சீனா பதிலளித்துள்ளது.
(i) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் பகுதியில் அமைந்த சுமார் 5,180 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்திய நிலப்பகுதியை
(ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு), கடந்த 1963-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சட்டவிரோதமாக சீனாவுக்குத்
தாரை வார்த்தது.
(ii) இந்த விவகாரத்தில்
அண்மையில் கருத்துதெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்
ரண்தீர் ஜெய்ஸ்வால், 'ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒரு பகுதி. 1963-ஆம் ஆண்டு
பாகிஸ்தான்-சீனா இடையே கையொப்பமான எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்க
வில்லை. இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது.
பாகிஸ்தானின் சட்டவிரோத
ஆக்கிரமிப்பின் கீழுள்ள வழியாக சென்று இந்தியப் பகுதி சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடதிட்டத்தையும்
நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் முழுவதும்
இந்தியாவின் பிரிக்க முடியாத மற்றும் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை சீனா மற்றும் பாகிஸ்தான்
அதிகாரிகளிடம் இந்தியா பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது” என்றார்.
(iii) இந்தியாவின்
இந்த ஆட்சேபத்துக்குப் பதிலளித்துப் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்
மௌ நிங் கூறியதாவது: ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட பகுதி. எங்கள்
சொந்த மண்ணில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புப் பணிகள் குறித்து கேள்வியெழுப்ப யாருக்கும்
உரிமையில்லை. 1960-களிலேயே சீனாவும் பாகிஸ்தானும் ஒரு இறையாண்மை கொண்ட நாடுகளாக இது
குறித்த எல்லை ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. மேலும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட
திட்டம், சமுதாய வளர்ச்சியையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான ஒரு
பொருளாதார முயற்சி மட்டுமே. காஷ்மீர் விவகாரமானது ஐ.நா. சாசன விதிகளின்படி, அமைதியான
வழியில் தீர்க்கப்பட வேண்டும் என்ற சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
8. ஆந்திர மாநிலம்,
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து திங்கள்கிழமை (ஜன. 12) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-62ராக்கெட்,
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கைச் சென்றடையவில்லை. ராக்கெட்டின் மூன்றாம்
நிலையில் பிரச்னை கண்டறியப்பட்டதாகவும், அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்
இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
(i) பாதுகாப்புத்
துறை பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன் விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளை பாதுகாப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்தது. புவி கண்காணிப்பு மற்றும்
ராணுவப் பாதுகாப்புக்கான தரவுகளை நிகழ்நேரத்தில் வழங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது.
(ii) இதை பிஎஸ்எல்வி
சி-62 ராக்கெட் மூலம் 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை
நிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.
(iii) அதனுடன் சென்னையைச்
சேர்ந்த ஆர்பிட்எய்ட் ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்த ஆயுள்சாட் செயற்கைக்கோள், ஸ்பெயின்
ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய கிட் எனப்படும் பூமிக்கு மீண்டும் திரும்பிவரும்
விண்கலம் உள்பட 15 செயற்கைக்கோள்களையும் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
(iv) பிஎஸ்எல்வி
சி-62 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் இரு திரவ எரிபொருள் என்ஜின்கள்,
இரு திட நிலை என்ஜின்கள் என நான்கு நிலைகள் உடையது.
(v) இறுதிக்கட்டப்
பணிகள் மற்றும் 22.30 மணிநேர கவுன்ட்டவுனுக்கு பிறகுஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன்
ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை (ஜன. 12) காலை 10.18 மணிக்கு
பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
(vi) ராக்கெட் தரையில்
இருந்து புறப்பட்ட 8 நிமிஷங்களில் முதல் 2 நிலைகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டன. பின்னர்
மூன்றாம் நிலையான பிஎஸ் 3 அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அத்தருணத்தில்
அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
(vii) இதையடுத்து,
திட்டமிட்ட இலக்கைவிட்டு திசை மாறிய ராக்கெட், அதற்கு அடுத்த சில நிமிஷங்களில் கட்டுப்பாட்டு
மையத்துடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற
முடியவில்லை என இஸ்ரோ அறிவித்தது.
(viii) இதுதொடர்பாக
இஸ்ரோ தலைவர் வி.நாரயணன் கூறியதாவது:
பிஎஸ்எல்வி சி
-62 ராக்கெட்டின் மூன்றாம் நிலையின் செயல்பாடுகள் இறுதி வரை திட்டமிட்டபடி நிகழ்ந்தன.
ஆனால், அதன்பின்னர், நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து ராக்கெட் விலகியது. இதுகுறித்து
முழுமையாக ஆய்வு செய்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
(ix) இதற்கு முன்னர்,
கடந்த ஆண்டு மே மாதம், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ் -09 ரிசாட்
1பி எனும் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதற்காக அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்டும்
இலக்கை சென்றடையவில்லை. அந்த ராக்கெட்டிலும் மூன்றாம் நிலையிலேயே பிரச்னை ஏற்பட்டது
குறிப்பிடத்தக்கது.
9. மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய நிதிநிலை அறிக்கையை
தாக்கல் செய்வார் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
(i) நாடாளுமன்றத்தின்
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28- ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக்
கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார். குடியரசுத் தலைவரின்
உரைக்குப் பிறகு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார
ஆய்வறிக் கையை தாக்கல் செய்வார்.
(ii) ஆண்டுதோறும்
பிப். 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிகழாண்டு பிப். 1-ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்பது தெளிவுபடுத்தப்படாமல்
இருந்த நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மக்களவைத்
தலைவர் ஓம் பிர்லா தில்லியில் தெரிவித்தார்.
10. இந்தியாவை விட
முக்கியத்துவம் வாய்ந்த நாடு அமெரிக்காவுக்கு வேறு எதுவும் இல்லை என்று இந்தியாவுக்கான
அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
(i) தில்லியில் அமெரிக்க
தூதரகத்துக்கு வந்த அவர் முறைப்படி தூதர் பொறுப்பை ஏற்றார். முன்னதாக செய்தியாளர்களைச்
சந்தித்த அவர் கூறியதாவது:
அரிய தனிமங்கள்,
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் 'பெக்ஸ் சிலிக்கா'
முன்னெடுப்பில் இந்தியாவும், அமெரிக்காவும் உத்திசார்ந்த கூட்டாளியாக மாற இருக்கின்றன.
அமெரிக்கா கடந்த
மாதம் 'பெக்ஸ் சிலிக்கா' முன்னெடுப்பை மேற்கொண்டது. இதில் ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன்,
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே இணைந்துள்ளன. அதில் முழுநேர உறுப்பினராக இணைய வேண்டும்
என்று இந்தியாவுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
உலகம் புதிய தொழில்நுட்பங்களுக்குள் நுழையும்போது இந்தியாவும், அமெரிக்காவும் அதில்
கைகோத்து செயல்படுவது அவசியம் என்றார்.