January 14, 2026 – தினமணி செய்தித்தாள் - சிறு துணுக்கள்
1. ஐரோப்பிய ஒன்றியத்தின்
புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 350-க்கும் மேற்பட்ட
டிராக்டர்களுடன் விவசாயிகள் நாடாளுமன்றமுற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்."
(i) பிரேஸில், ஆர்ஜென்டீனா,
பொலிவியா, பராகுவே, உருகுவே ஆகிய தென் அமெரிக்காவின் 'மெர்கோசர்' கூட்டமைப்பு நாடுகளுடன்
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளது.
(ii) இந்த ஒப்பந்தம்
அமலுக்கு வந்தால், அந்த நாடுகளிலிருந்து விவசாயப் பொருள்கள் மிகக் குறைந்த விலையில்
ஐரோப்பாவுக்குள் இறக்குமதி செய்யப்படும். இதனால் பிரான்ஸ் நாட்டு விவசாயிகளின் வருமானம்
குறையும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
(iii) இந்த ஒப்பந்தத்தைத்
தடுக்க வலியுறுத்தி, பாரீஸின் புகழ்பெற்ற ஷாம்ப்ஸ்-எலிசிஸ் சாலை வழியாக நூற்றுக்கணக்கான
டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணியாக வந்தனர். சென் நதியைக் கடந்து நாடாளுமன்றத்தை
நோக்கிச் சென்ற விவசாயிகள், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை
எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். காவல் துறை பாதுகாப்புடன் நடந்த இந்தப் பேரணியால்
பாரீஸின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
(iv) அரசின் நிலைப்பாடு:
விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பதிலளித்த அரசு செய்தித் தொடர்பாளர் மாட்ப்ரீஜியன்,
விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் புதிய திட்டங்களை அரசு விரைவில் அறிவிக்கும்' என்று
உறுதியளித்தார்.
(v) பிரான்ஸ் அதிபர்
இமானுவேல் மேக்ரான் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கிறார். இருப்பினும், இத்தாலி
உள்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் பராகுவேயில் வரும் சனிக்கிழமை இந்த
ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. ஆட்சிக்கு எதிரான
மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக
தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
(i) போராட்டங்களுக்கு
இடையே மக்கள் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா அறிவித்துள்ள இந்தத் திடீர்
வரி, ஈரானுக்குப் புதிய நெருக்கடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(ii) அமெரிக்க அதிபரின்
இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு பெரிதாகப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு
வட்டாரங்கள் தெரிவித்தன.
(iii) இதுதொடர்பாக
அந்த வட்டாரங்கள் கூறுகையில், 'இந்தியா வர்த்தகம் மேற்கொள்ளும் முதல் 50 நாடுகளின்
வரிசையில் கூட ஈரான் இல்லை. கடந்த நிதியாண்டு ஈரானுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தகத்தின்
மதிப்பு 1.6 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ.14,450 கோடி). இது அந்த நிதியாண்டில் இந்தியா
மேற்கொண்ட மொத்த வர்த்தகத்தில் வெறும் 0.15 சதவீதம்தான். சில பொருளாதார காரணங்களால்
நடப்பு நிதியாண்டில் ஈரானுடனான இந்தியாவின் வர்த்தக மதிப்பு மேலும் சரியக் கூடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
(iv) அந்நாட்டுடன்
குறைந்த அளவில் இந்தியா வர்த்தகம் மேற்கொண்டு வரும் நிலையில், அதில் உணவு மற்றும் மருந்துப்
பொருள்களின் வர்த்தகம் பிரதான இடம்பிடித்துள்ளன. எனவே, டிரம்ப்பின் தற்போதைய வரி விதிப்பு
முடிவால் இந்தியாவுக்கு பெரிதாகப் பாதிப்பு இருக்காது' என்று தெரிவித்தன.
(v) கடந்த 2019-ஆம்
ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் விதித்த பொருளாதாரத் தடைகளால், ஈரானிடம் இருந்து
கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
3. ரஷிய கச்சா எண்ணெய்யை
இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐரோப்பிய
நிறுவனம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக இந்தியா இரண்டாவது இடத்தில்
இருந்தது.
(i) ரிலையன்ஸ் குழுமம்
மற்றும் மத்திய அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை
குறைத்ததே இதற்கு காரணம் என எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வு நிறுவனம் (சிஆர்இஏ)
வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி அந்த
அறிக்கையில் நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.
(ii) அதில் மேலும்
கூறப்பட்டிருப் பதாவது: ரஷியாவிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்
நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனா தொடர்கிறது. 6 பில்லியன் யூரோ மதிப்பிலான கச்சா
எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்கிறது. ரஷியாவின் மொத்த ஏற்றுமதி வருவாயில் 48 சதவீதம்
சீனாவிடமிருந்தே பெறப்படுகிறது.
(iii) சீனாவுக்கு
அடுத்தபடியாக 2.6 பில்லியன் யூரோ ரஷிய கச்சா எண்ணெய்யை துருக்கி இறக்குமதி செய்கிறது.
2.3 பில்லியன் யூரோ மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதியுடன் மூன்றாவது இடத்தில் இந்தியா
உள்ளது. இதில் 1.8 பில்லியன் யூரோவுக்கு முழுமையாக கச்சா எண்ணெய்யும் 424 மில்லியன்
யூரோவுக்கு நிலக்கரியும் 82 மில்லியன் யூரோவுக்கு எண்ணெய் பொருள்களும் இந்தியா இறக்குமதி
செய்தது.
(iv) கடந்த நவம்பரில்
2.6 பில்லியன் யூரோவுக்குரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்த நிலையில், டிசம்பரில்
இது கணிசமாக குறைந்தது. ரிலையன்ஸ் குழுமத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும்
மத்திய அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்ததே
இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
(v) உக்ரைன் போரில்
ரஷியாவுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதாக குற்றஞ்சாட்டி ரோஸ்நெஃப்ட் மற்றும் லூகோயில்
நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.
(vi) இதனால் இந்த
இரு நிறுவனங்களிடம் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிப்பு பணியை
மேற்கொண்ட ரிலையன்ஸ் குழுமம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கழகம்(ஹெச் பிசிஎல்), ஹெச்பிசிஎல்-மிட்டல்
எரிசக்தி நிறுவனம், மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிகல்ஸ் நிறுவனம் ஆகியவை
இறக்குமதியை வெகுவாக குறைத்தது.
(vii) உலகளவில் கச்சா
எண்ணெய் இறக்குமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா அமெரிக்கா தடை விதிக்காத பிற
ரஷிய நிறுவனங்களிடம் தொடர்ந்து வருகிறது. இறக்குமதியை ரஷியாவிடம் இருந்து அதிகப் படியான
கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது 50 சதவீத
வரியை அமெரிக்கா கடந்த ஆண்டு விதித்தது குறிப்பிடத்தக்கது.
4. அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் - மார்கோ ரூபியோ
5. சீனாவைப் பின்னுக்குத்
தள்ளி உலகிலேயே மிக அதிகமாக அரிசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் ஐயப்பாடில்லை.
அரிசியும் கோதுமையும் இந்திய விவசாயிகளின் முக்கிய வேளாண் உற்பத்திகளாக தொடர்ந்து உற்பத்தி
சாதனைக்கு வழிகோலியிருப்பது அரசின் உறுதியான ஆதரவால்தான் என்பதை மறுத்துவிட முடியாது.
(i) வேளாண் பெருமக்கள்
நெல், கோதுமை சாகுபடியை மட்டுமே நம்பியிருக்காமல் மாற்றுப் பயிர்களுக்கு முன்னுரிமை
தந்து மாற வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக நிறைவேறாமல் தொடர்கிறது. இதற்கு விவசாயிகள்
மட்டுமல்லாமல் அரசின் கொள்கை முடிவும் முக்கியக் காரணம்.
(ii) குறைந்தபட்ச
ஆதரவு விலை மட்டுமல்லாமல், உறுதிப்படுத்தப்பட்ட கொள்முதலும் நெல், கோதுமை சாகுபடியை
அதிகலாபமுள்ள பயிர்களாக நிலைநிறுத்தி இருக்கின்றன. அரசின் ஆதரவு, பாசன வசதி, தானியக்
கிடங்குகள், இடுபொருள் கடன் வசதி உள்ளிட்ட அனைத்துமே நெல், கோதுமை சாகுபடிக்கு உத்தரவாதம்
அளிக்கின்றன.
(iii) பருப்பு வகைகள்,
எண்ணெய் வித்துகள், சிறுதானியம், சோளம் உள்ளிட்ட மாற்றுப் பயிர்களுக்கு விலை உத்தரவாதம்,
சந்தை ஆதரவு, சாகுபடிக்குப் பிறகான கட்டமைப்பு வசதிகள் போன்றவை வழங்கப்படாததால், அதிகமான
சலுகைகள் அளிக்கப்பட்டு லாபத்துக்கு உத்தரவாதம் உள்ள நெல், கோதுமை சாகுபடியை வேளாண்
பெருமக்கள் நாடுவதை ஊக்குவிக்கின்றன.
(iv) நெல் (அரிசி),கோதுமை
சாகுபடி உணவுப் பாதுகாப்புக்கு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அளவுக்கு
அதிகமான உற்பத்தி மூலம் உலகச் சந்தைக்கு இந்த தானியங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும்
நாடு என்கிற பெருமை இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது ஒருவகையில் தேசத்தின் சர்வதேச
மதிப்பை அதிகரித்திருப்பதும் உண்மை. அதேநேரத்தில் நெல், கோதுமைப் பயிர்களால் கிடைக்கும்
ஆதாயத்துடன் வெளியில் தெரியாத பல இழப்புகளையும் நாம் சந்திக்கிறோம் என்பதை உணரத் தவறுகிறோம்.
(v) குறிப்பாக, நெல்
சாகுபடி அதிகமான அளவில் பாசன நீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
நெல், கோதுமை தானியப் பயிர்கள் வெளியேற்றும் கரியமில வாயுபுவி வெப்பமயமாவதற்கு காரணியாகிறது.
மண் வளம் குறைவது, அதிகரித்த இடுபொருள் செலவு போன்றவற்றையும் நெல் சாகுபடி அதிகரிப்பதன்மூலம்
நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
(vi) அரிசி உற்பத்தியில்
அடைந்திருக்கும் சாதனையும், அதிகரித்த கோதுமை சாகுபடிப் பரப்பும் மேலோட்டமாக மகிழ்ச்சி
அளித்தாலும், அதை நாம் எச்சரிக்கையாகவும் பார்க்க வேண்டும். வேளாண்மை என்பது அதிகரித்த
உற்பத்தியும், ஏற்றுமதியும் என்பதுடன் நின்றுவிடக் கூடாது. விவசாயிகளை ஒன்றிரண்டு சாகுபடிப்
பயிர்களுடன் முடக்கிவிடும் வேளாண் கொள்கை ஆக்கபூர்வமானதல்ல. பருப்பு வகைகள், எண்ணெய்
வித்துகள், சிறு தானியங்கள், சோளம் உள்ளிட்ட இன்ன பிற பயிர்களின் சாகுபடியை அதிகரிக்கும்
விதத்தில் அரசின் திட்டங்கள் இருந்தால்தான் தொலைநோக்குப் பார்வையுடையதாக இருக்கும்.
(vii) அரிசி, கோதுமை
தானியப் பயிர்களின் உத்தரவாதமுள்ள மகசூல், கொள்முதல் ஆகியவற்றால் அதில் ஈடுபடும் வேளாண்
மக்களை ஏனைய மாற்றுப்பயிர்களின் சாகுபடிக்கு ஈர்ப்பது எளிதானதல்ல. உத்தரவாதமுள்ள கொள்முதல்,
நம்பகத்தன்மையுள்ள சந்தை, உற்பத்தியைப் பாதுகாப்பதற்கான கிடங்குகள் போன்றவை வழங்கப்படாமல்,
அவர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மாற்றுப் பயிர்களுக்கு அவர்கள் மாறாமல்
இருந்தால், அதன் விளைவுகளை தேசம் மட்டுமல்ல அந்த விவசாயிகளும் சந்திக்கக்கூடும்.
(viii) இந்திய மக்கள்தொகையில்
42% மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்; 46% தொழிலாளர்களுக்கு விவசாயம் வாய்ப்பளிக்கிறது.
ஆனால், இந்திய ஜிடிபியில் வேளாண் துறையின் பங்களிப்பு வெறும் 5% மட்டுமே. நபார்டு அறிக்கையின்படி,
வேளாண் குடும்பங்களின் மாத வருவாய் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.13,663. அதில் விவசாயம்
மூலம் கிடைக்கும் வருமானம் என்று பார்த்தால், வெறும் ரூ.4,476 மட்டுமே. மற்றவை பிற
வேலைகளிலிருந்தும் தொழில்களிலிருந்தும் கிடைப்பவை.
(ix) மக்கள்தொகைப்
பெருக்கம் விவசாயக் குடும்பங்களின் விவசாய நில இருப்பை லாபகரமாகவும் வேளாண்மைக்கு ஏற்றதாக
இல்லாமல் குறைத்திருக்கிறது. 1971-இல் ஓர் இந்திய விவசாயியின் சராசரி விவசாய நிலப்பரப்பு
2.28 ஹெக்டேர் என்றால், 2021-இல் அதுவே வெறும் 0.74 ஹெக்டேராகக் குறைந்திருக்கிறது.
இதனால், பெரும்பாலான விவசாயிகள் லாபகரமாகப் பயிரிட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த
முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
(x) கூட்டுறவுப்
பண்ணைகளோ, கார்ப்பரேட் விவசாயமோ உருவாகாமல் போனால் பெரும்பாலான விவசாய நிலப்பரப்பும்
தரிசாக மாறிவிடும் அபாயத்தை இந்தியா எதிர்கொள்கிறது. இடுபொருள் செலவும், பணவீக்கமும்
வேளாண் பொருள்களின் விலையை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், விவசாயிகள் மாற்றுத் தொழில்
தேடி வெளியேற வேண்டும்; இல்லையென்றால், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்கிற
நிலையை நோக்கி நகர்ந்து வருகிறோம்.
(xi) 1991-இல் சீனாவில்
விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 60% என்றால் இந்தியாவில் 63%. சீனா அதை 22% -ஆகக்
குறைத்திருக்கிறது. இந்தியாவில் 42% விவசாயிகள். மானியத்தின் தயவில் விவசாயம் என்பது
பெருமைக்குரிய ஒன்றல்ல. லாபகரமான விவசாயத்தையும், அனைத்துப் பயிர்களின் விவசாயத்தையும்
இந்தியாவின் வேளாண் கொள்கை வழிநடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.